Posted by: barthee | July 9, 2009

செயல் வீரர் ச. சத்தியமூர்த்தி மாஸ்டர்

(இப்பதிவு திரு.கி.செ.துரை என்னும் வல்வை மகன் அலைகள் என்னும் வலைத்தளத்தில் எழுதியது.)

வல்வை சிதம்பராக்கல்லூரி, தொண்டைமானாறு மகாவித்தியாலயம், மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய இடங்களில் அதிபராகவும், ஆசிரியராகவும் இருந்த செயல் வீரர் திரு.ச.சத்திய மூர்த்தி கடந்த வாரம்(14.09.06ல் இக்கட்டுரை எழுதப்பட்ட நாளில் இருந்து) காலமான செய்தி அவரை அறிந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை அறியாதவர்கள் அறிந்தால் அவருடைய வாழ்வு அவர்களுக்கும் கிடைத்தற்கரிய மாபெரும் பொக்கிஷமாகும்.
வல்வை காட்டுவளவு என்ற கடற்கரையோர பகுதியில் திரு.திருமதி சரவணமுத்து தம்பதியர்க்கு மகனாகப் பிறந்த இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியாவார். வறுமையான ஒரு சூழலில் பிறந்து, வாழ்க்கையில் வெற்றிபெற்ற ஒருவராக இவர் வந்த கதை மிகவும் சுவாரசியமானது, ஒவ்வொருவரும் அறிய வேண்டியதாகும். பாடசாலை ஆசிரியராக இருந்து அதிபராகி, தென்னாபிரிக்காவரை தன்னுடைய பணியை விஸ்தரித்த அறிவார்ந்த ஆலமரம் இவர்.

நான் பேசுவதில் அதிக நம்பிக்கையற்றவன் எனது செயல்களினால்தான் நான் மற்றவருடன் பேசுகிறேன். இது சத்தியமூர்த்தி மாஸ்டர் அடிக்கடி சொல்லும் வாசகம். இதே வரிகளை நீங்கள் வேறு ஒருவரிடமிருந்தும் கேட்பீர்கள் அவர் வேறுயாருமல்ல தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள்தான். தலைவர் பிரபாகரன் ஆளுமையுள்ள ஒருவராக வளர்ந்த காலத்தில் அவர் கற்ற வல்வை சிதம்பரக்கல்லூரியில் அதிபராக இருந்தவர், அவருடைய ஆசிரியர்களில் ஒருவாரான ச.சத்தியமூர்த்தி மாஸ்டர் என்பதை முதலிலேயே அறிந்து கொண்டால், அடுத்து அவரை இலகுவாக பல தளங்களிலும் புரிந்து கொள்ளலாம்.

அக்காலத்தில் சிதம்பராக்கல்லூரிக்கு சுமார் பத்துக்கிலோமீட்டர் சுற்றாடலில் இருந்து மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். காலை 8.00 மணிக்கு தொடங்கும் பாடசாலை மாலை 4.00 மணிக்கு முடிவடையும். மாணவர்களுக்கு தரமான மதிய உணவைக் கொடுத்தால் அவர்களை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கலாம் என்று திட்டமிட்டார். உடனடியாக சிங்கராசா என்ற திறமைசாலியை வேலைக்கு அமர்த்தி சிற்றுண்டிச்சாலையை ஆரம்பித்தார். பதினைந்து சதம் கொடுத்தால் போதும் மூன்று கறிகளும் சோறுமாக சுடச்சுட மதிய உணவு கிடைத்துவிடும். வெள்ளிக்கிழமைகளில் பாயாசத்துடன் சாப்பாடு கிடைக்கும். யாழ். குடாநாட்டில் எந்தப் பாடசாலைகளிலும் கற்பனைகூட பண்ண முடியாத காரியம் அது. செயலில் செய்து காட்டினார், அவரது திட்டம் பெரு வெற்றி பெற்றது. பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பதை பாட்டாக மட்டும் பாடி என்ன பயன் அதைச் செயலாக்க வேண்டும், அதுவே கல்வி என்று கூறினார். இதுதான் சத்தியமூர்த்தி மாஸ்டர்.

சிறீலங்கா அரசாங்கத்தை நம்பி எதுவும் செய்துவிட முடியாது. பாடசாலை மாணவர்கள் அதிகமாக அதிகமாக ஆய்வு கூடம் உள்ளிட பல புதிய கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்ற நிலை உருவானது. உடனடியாக கல்வியமைச்சு ஒதுக்கிய சிறிய நிதியுடன் பாடசாலை மாணவர்களை சிரமாதானத்தில் ஈடுபடுத்தி கட்டிடம் கட்டி முடிக்கும் பணியை முடுக்கிவிட்டார். அவர் போன பாடசாலைகள் எல்லாமே சிரமதானத்தால் உருவாக்கப்பட்ட வகுப்பறைகள் புதுப் பொலிவுடன் மிளிரும். மாணவர்கள் வெறுமனே புத்தகக் கல்விக்குள் மூழ்கிக் கிடப்பதால் எதுவித பயனும் கிடையாது, தொழில் முறையில் அவர்கள் வளர வேண்டும். அதற்கு சிரமதானம் சிறந்த தொழிற்பயிற்சி என்பது அவருடைய தத்துவமாக இருந்தது. பல்கலைக்கழகம் போகாமலே மிகச்சிறந்த கைவினைத் தொழிலாளிகள் பலரை அவர் உருவாக்கிவிட்டார்.

சிதம்பராக்கல்லூரியில் அதிபாராக இருந்து அக்கல்லூரியை நல்ல நிலைக்கு உயர்த்திய பின்னர் தொண்டைமானாறு மகா வித்தியாலயத்திற்கு அதிபராக போனார். அக்காலத்திலே மேலும் பல நம்ப முடியாத, இன்றுவரை பலர் அறியாத சாதனைகளை எல்லாம் அங்கிருந்தே படைத்தார். அதில் முதலாவது தொண்டைமானாறு நன்னீர் ஏரித்திட்டம். சவராகி வரண்டு வரும் யாழ் குடாநாட்டை செல்வம் கொழிக்கும் விவசாய நிலமாக மாற்றும் திட்டமே இதுவாகும். இதனுடைய அடிப்படைச் சிந்தனையாளர் இவரே. இதற்கான விளக்கத்தை உலகவங்கி அதிகாரிகளுக்காக இவர் தயாரித்தபோது அருகில் இருந்தும், அதற்குரிய விளக்கப்படங்களை அவருடைய வழிகாட்டலில் வரைந்ததாலும் எனக்கு அவர் வைத்த கருத்துக்கள் அனைத்தும் இன்றும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துள்ளன.

கடல் புகுவதால் தொண்டைமானாறு கடல் நீரேரி உப்பு நீரேரியாக உள்ளது. துருப்பிடிக்காத பிளாஸ்டிக் அணை மூலம் எப்படி கடல் நீரை தடுத்து நிறுத்துவது. குடாநாட்டை ஊடறுக்கும் அந்த ஒரே ஏரியில் மழை நீரை நிரப்பி அதை நன்னீரேரியாக மாற்றுவது எப்படி ? அதன் மூலம் குடாநாட்டில் பூரண தன்நிறைவுக்கு வழி காண்பது எப்படியென விளக்குவது அவருடைய திட்டமாகும். இரசாயன, பௌதிக விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்த காரணத்தால் மண் ஆய்விலும் ஈடுபட்டு, சவர் நிலத்தை நன்நிலமாக மாற்ற ஏரியின் கரையோரம் முழுவதும் புளியமர நடுகைத் திட்டத்தையும் கூடவே இணைத்திருந்தார். 1974 ல் இவர் தீட்டிய திட்டத்தை உலக வங்கி அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் தமிழன் உயர்வதை விரும்பாத சிறீலங்கா அரசு அதற்கு உடன்பட அடியோடு மறுத்துவிட்டது. நமது அக்கால அரசியல் தலைவர்களுக்கும் இவருடைய திட்டத்தைப் புரியும் தூரப் பார்வை இருந்ததாகக் கூற முடியாது. அன்றே இதைச் செய்திருந்தால் இன்று குடாநாட்டில் பராக்கிரம சமுத்திரம் போல தொண்டைமானாறு நன்னீரேரி உருவாகியிருக்கும், வறுமை பறந்திருக்கும்.

சிறீலங்கா அரசு நல்ல திட்டங்களுக்கு பணம் ஒதுக்காது என்பதை அதன் மூலம் உணர்ந்து கொண்டதும் இவரும் வேறு சில நண்பர்களும் ஒன்று சேர்ந்து புத்தவிகாரை போல ஒரு கட்டிடத்தை வரைந்து அதைக்கட்ட அனுமதி தரும்படி கோரினார்கள். அரசு மாதிரிப் படத்தைப் பார்த்ததும் உடன் பணத்தை ஒதுக்கியது. தொண்டைமானாறு அக்கரையிலேயே அக் கட்டிடத்தை கட்டி முடித்தார்கள். அது யாருக்கும் பயன்படவில்லை. இன்றும் இருக்கிறது, அங்கு ஆடுமாடுகளே படுத்துறங்குவதைக் காணலாம். இன்றுவரை சிறீலங்கா விமானங்கள் குண்டு வீசாத பத்திரமான இடமும் அதுதான் என்பதே வேடிக்கையான உண்மை. சிங்கள அரசின் பாரபட்சமான செயல்களை பலர் மேடை போட்டு முழங்கினார்கள். ஆனால் அதைக்கூட செயலால் உணர்தியவர் சத்தியமூர்த்தியாகும்.

நன்னீரேரித் திட்டம் சரிவாரமல் போனதும் அவர் சலிப்படைந்துவிடவில்லை. தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையக் கட்டிடப்பணிகளை பொறுப்பெடுத்து அதைக் கட்டி முடித்தார். வெளிக்கள ஆய்வு நிலையம் சாதாரணமான ஓர் இடமல்ல. உலகத்தின் பல நவீன தொழில்நுட்ப உபகரணங்களால் நிறைந்த விஞ்ஞான ஆய்வுகூடம். குடாநாடு முழுவதும் இருந்து மாணவர்கள் அங்கு வந்து முகாமிட்டு கல்வி கற்கும் இடமாகும். அந்த வெளிக்கள நிலையத்தில் அறிஞர் சித்திரவேல் தலைமையிலான குழுவினர் சுமார் 30ற்கும் மேற்பட்ட யாழ்ப்பாணத்து மீன்களுக்கு சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையாகப் பொதுப் பெயரிட்டனர். பல மீன்களை பிடித்து அகைளின் இறக்கைகளில் பிளாஸ்டிக் மட்டையில் அடையாளம் கட்டி மறுபடியும் கடலில் விடுவார்கள். இம்மீன்கள் சிலாபம், நீர்கொழும்புவரை பல இடங்களில் பிடிபடும். அத்தருணம் அம்மீன்களுக்கு அங்குள்ள பெயர்கள், அதே மீன்களுக்கு இங்குள்ள பெயர்கள் எல்லாம் தொகுத்து, செய்யப்பட்ட செந்தரப்பட்ட பெயரிடும் சிறந்த முயற்சி இதுவாகும். இதைச் செய்து நூலாக அச்சடித்து இலங்கை பூராவும் விநியோகம் செய்தது வெளிக்கள ஆய்வு நிலையம்தான். ஒரு தனிநாடு கண்டால் அங்குள்ள உயிரினங்களின் பொதுப்பெயர் பட்டியல் அவசியம். அதற்கான ஒரு முயற்சிபோலவே அன்று இது மிளிர்ந்தது. ஆசிரியர் சித்திரவேல் இதற்காக செக்கோசுலாவக்கியா சென்று பயிற்சி பெற்று வந்திருந்தார்.

அதன் பின்னர் தொண்டைமானாறு நீரேரியில் சீனாவில் இருந்து பாலை மீன்களை இறக்குமதி செய்து, வலையால் செய்யப்பட்ட தொட்டிகளில் அடைத்து விற்பனை செய்யும் முறையை அறிமுகம் செய்தார். இன்று டென்மார்க் போன்ற மீன் பிடித்தலில் முன்னேறிய நாடுகள் செய்யும் அத்தனை நுட்பங்களையும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்.குடாநாட்டிற்கு கொண்டுவந்த நவீன சிந்தனையாளராக இருந்தார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. கடற்றொழிலை ஒரு பாடமாக மாற்ற முயற்சித்தார். அக்காலத்தே இவரோடு நானும் இணைந்து செயற்பட்டேன். இலங்கைக்கான கடற்றொழில் பாடப்புத்தகத்தையும், பாடத்திட்டத்தையும் கல்வியமைச்சிற்காக தயாரித்த குழுவில் நாம் முக்கிய இடம் வகித்தோம்.

அந்த எண்ணங்களை உணர்ந்த ஜப்பானிய அரசு அவரைக் கொழும்பிற்கு அழைத்தது. நேரடியாக சென்று தமிழீழம் என்னும் தேசம் கடற்றொழிலாலேயே சுயநிறைவுப் பொருளாதாரத்தை அடைந்துவிடலாம் என்பதை ஜப்பானிய கடற்றொழில் நிபுணர்களுக்கு விளக்கினார். அதனால் அக மகிழ்ந்த ஜப்பானிய நிபுணர்கள் கடலில் மீன்கள் இருப்பதை கண்டறியும் ஸ்கனர், கடல் மண் ஆய்வு மூலம் கடலட்டை, கடல்முத்துக்கள் தேடும் ஆய்வுக் கருவிகள் என்று ஒரு லொறி நிறைய புத்தம் புதிய மீன்பிடிக் கருவிகளை அன்பளிப்பு செய்தனர். டென்மார்க்கில் உள்ள மீன் பிடிப்பாடசாலைகளில் இன்றும் கூட அதில் இருந்த பல கருவிகளை என்னால் காண முடியவில்லை. அந்தக் கருவிகளை இயக்கவும், அதன் மூலம் நவீன கடற்றொழிலை விருத்தி செய்யும் பயிற்சிகளை ஜப்பானிய அதிகாரிகளிடம் பெற்றோம். இது ஒரு முக்கிய சம்பவம், இதை இன்றும் அறிந்தவர் யாருமிலர். அதுதவிர யாழ் குடாநாட்டு கடலட்டைகளை எப்படி கோடான கோடி பணம் குவிக்கும் தொழிலாக மாற்றலாமென்பதையும் ஜப்பானிய நிபுணர் எடுத்துரைத்தனர். இனப்போரால் எல்லாமே அழிந்தது பிந்திய கதை.

அதே காலத்தில் பத்து நிமிடங்களில் பொருத்தி முடிக்கும் அரிஸ்பார் கதிரைகளை செய்து இதர பாடசாலைகளுக்கு வழங்கும் பணி கல்வியமைச்சில் அறிமுகமாகியிருந்தது. இதற்கு தலைமை தாங்கியவர் சிறந்த மனிதர் கல்வி அதிகாரி மல்லாகம் ஈ.வி.ராமநாதனாகும். இவருடன் இணைந்து புளியங்குளத்தில் இருந்து ஒரு லொறியில் யாவறணை மரத்தை இறக்கி, கல்வியங்காடு இயந்திர மர அரிவு ஆலையில் அதை அரிந்து 150 மேசைகளையும், கதிரைகளையும் பாடசாலை மாணவர்களை வைத்தே உருவாக்கினோம். அதன் மூலம் பாடசாலைக்கு பெரு நிதியீட்டிக் கொடுத்தோம். அதற்கு உறுதுணையாக இருந்தவர் ச.சத்தியமூர்த்திதான்.

யாழ். குடாநாட்டு மீனவர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க புதியதோர் வழிகாட்டலையும் இவரே செய்தார். இவருடைய சகோதரர் விநாயகத்தின் வள்ளத்தின் மூலம் லோமியனுக்கு மீன்பிடிக்கப் போகும் முறையை அறிமுகம் செய்தார். மூன்று தினங்கள் வள்ளத்தில் போய் ஆழ் கடலிலேயே தங்கி மீன் பிடிக்கும் முறை இது. பீற்று பாங் கடலடித்தள மேடையில் மீன்கள் கூடும் பருவத்தில் பொருந்தொகையான மீன்களைப் பிடிக்கும் முறை இதுவாகும். ஒரு தடவை போய் வந்தால் அப்பணத்தில் ஒரு புதிய வீட்டையே கட்டிவிடலாம். ஆனாலும் பிடிக்கப்படும் மீனைப் பழுதடையாமல் காக்க பாரிய கப்பல்கள் அவசியம். மீனை கடலில் வைத்தே ரின்னில் அடைக்க வேண்டும் என்பதையும் அங்கு பிடிபடும் பெருந்தொகை மீன்கள் உணர்த்தின. அங்கு பிடிபடும் எல்லா மீன்களும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். இந்த அதிக மீன் படும் இலக்கை இன்றுவரை நமது மீனவர் சரியாக பயன்படுத்தவில்லை. ஜப்பானிய கப்பல்களே இப்போது அந்த இடத்தில் நிற்கின்றன. ஆனால் அன்றே தனது அறிவால் லோமியன் மீன்பிடியை உற்சாகப் படுத்தியவர் இவராகும். அமைதி வந்தால் தமிழீழத்தில் என்ன இருக்கிறதெனக் கேட்டு கேலி செய்யும் அறிவிலிகளுக்கு பதில் சொல்ல லோமியன் மீன்பிடியே போதியதாகும்.

அறிவின் போதாமையால் நாங்கள் எங்களிடம் எதுவுமே இல்லை என்று நினைக்கிறோம். ஆனால் எல்லாமே நம்மிடம் இருக்கிறது, விடிவு வந்தால் சொந்தக் காலிலேயே நிற்கலாம் என்று எப்போதும் சொல்வார். அதற்கும் ஓர் உதாரணத்தைத் தர முடியும். ஒரு நாள் பாடசாலைக் கலை விழாவிற்கு நாடக மேடை அமைக்க வேண்டிய நிலை வந்தது. கறுப்புத் திரைச்சீலையாலேயே மேடை போட வேண்டிய தேவை ஏற்பட்டது. வாடகைக்கு அதை எடுப்பதானால் பெரும் பணம் செலவாகும். அவருடைய மூளை வேலை செய்தது. பாடசாலையில் யூரியா அடைத்து வரும் கழிவுப் பைகள் ஏராளமிருந்தன. சட்டென அவற்றை மூலப் பொருளாக்கி, அவற்றுக்கு கறுப்பு வர்ணம்பூசி, துருப்பிடித்த சக்கர றேசர்களை அசிற்றில் போட்டு உருளவைத்து இன்று நாம் நினைத்தே பார்க்க முடியாத நவீன மேடையை அமைத்தார். இப்படி எல்லாமே இருக்கிறது, தேடுங்கள், தேடுங்கள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்.

அவர் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீவிர பக்தராக இருந்தார். இராணுவம் எரித்த சித்திரத்தேர் உருவாக்கத்தில் இவரும் முன்நின்று உழைத்தவரே. கந்தபுராணத்தை சுவைபட படித்து மற்றவருக்கும் கூறுவது அவருடைய ஓய்வு நேர இன்பம். தொண்டைமானாற்றில் தொடங்கினால் தோல்வியில் முடியாது என்று கூறுவார். மேலும் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது குண்டு வெடித்தது தொண்டைமானாறு மகாவித்தியாலயத்தில்தான். அவர் எப்போதுமே தமிழீழத் தேசியத் தலைவரில் உயர்ந்த அன்பு பாராட்டி வாழ்ந்தார். முருகனைப் போற்றி வாழ்ந்த அவரை தமிழ் வளர்த்த கந்தவேள் என்றும் காத்து நின்றார். அதை உணர்த்தவும் ஒரு சம்பவம் அவருடைய வாழ்வில் நடைபெற்றது.

அன்று அவருடைய வெற்றியைக் கண்டு பொறுக்க முடியாத சில ஆசிரியர்கள் அவரை அதிபர் பதவியிலிருந்து அகற்ற முயன்றார்கள். பல முயற்சிகள் செய்தும் அதைச் சாத்தியமாக்க அவர்களால் இயலவில்லை. கடைசியில் ஒரு திட்டம் தீட்டினார்கள். பாடசாலையில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்துவிட்டு பாடசாலைக்குள் வைத்து இவர் இயக்கம் நடாத்துவதாக போலீசில் முறைப்பாடு செய்து, இவரை சிறையில் தள்ளுவது அவர்கள் தீட்டிய திட்டம். ஆனால் அவர்கள் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த இடத்தை போலீசாரிடம் கூற முன்னரே முருகன் அவருக்குக் காட்டினார். தற்செயலாக அந்தத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவர் போலீஸ் நிலையம் சென்;று ஒப்படைத்தார். அவர் துப்பாக்கியை ஒப்படைத்த சில மணி நேரங்களில் அது குறித்த மொட்டைக்கடதாசி போலீஸ் நிலையம் போய்ச் சேர்ந்தது. முன்னரே துப்பாக்கி கிடைத்திருக்காவிட்டால் அவரை போலீஸ் என்ன செய்திருக்கும் என்பதை இங்கு எழுத வேண்டிய அவசியமில்லை. அன்று தன்னை ஆபத்திலிருந்து காத்தது முருகனே என்று ஒரு நாள் தபாலில் எனக்கு எழுதியிருந்தார். அதன் பின்னர் அங்கிருப்பது சரியில்லை என்று தென்னாபிரிக்கா சென்று சில காலம் பணிபுரிந்து மறுபடியும் ஊர் திரும்பினார். பிற்பகுதியில் நோய்வாய்ப்பட்டாலும் முருக தொண்டராக இருந்தார். வல்வை சவ வண்டில் உட்பட பல புதிய உருவாக்கங்களுக்கு உழைத்தார். சென்ற வாரம் அவர் போற்றிய முருகன் காலடியிலேயே சங்கமித்துள்ளார்.

குழந்தைகள் இல்லாவிட்டாலும், எல்லாக் குழந்தைகளையும் தன் பிள்ளையாக நினைத்து முன்னேற்றிய இந்த மனிதரின் வாழ்வில் நான் கண்ட உண்மைகள் பல. ஒன்று எளிமை, இரண்டு உண்மை, மூன்று புதுமையை கண்டு பிடித்தல், நான்கு எல்லாம் நம்மிடம் உண்டு அறிவால் கண்டு பிடித்தால் சுவர்க்கம் காலடியில் என்பதுதான். ஒவ்வொரு மனிதரும் அறிய வேண்டிய இவரை இன்று யாழ். குடாநாட்டில் நடைபெறும் போரால் எவராலும் உரியபடி அறிய முடியவில்லை. இருந்தாலும் மற்றவர் அறியாமல் இருப்பதே அவருடைய உண்மையான திறமைக்கு அடையாளமாகும்.

யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக புவியில் பூக்கள் மலர்வதில்லை.

தமது கடமையை சரிவரச் செய்த பூக்கள் தெய்வத்தின் காலடியில் விழுகின்றன. ஞானத்தமிழன் முருகனின் காலடியில் ஒரு புதிய பூ! அதுதான் செயல்வீரர் ச. சத்தியமூர்த்தி. இந்த செயல் வீரனைப் போற்றிக் காத்து பதமளித்த செல்வச்சந்நிதி வாழ் தீந்தமிழ் வேல் முருகா உன்பாதங்களை இக்கட்டுரை வணங்குகிறது.

சேவலும் மயிலுமாக நிற்கும் செல்வச்சந்நிதி வேலன் இன்று சத்தியமூர்த்தியையும் தன்னுடன் இணைத்தான்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Categories

Follow

Get every new post delivered to your Inbox.